📜 About this temple
பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், "வாசீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். புராண வரலாறு : மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைசெய்யமுடியவில்லை. எனவே, மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும்.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).